காளை வாகனன் என்று போற்றப்படும் சிவபெருமான் எருமையாக மாறி பஞ்ச பாண்டவர்களுக்குத் தரிசனம் தந்தார் என்று புராணம் கூறுகிறது. அவ்வாறு காட்சி தந்த திருத்தலம் கேதார்நாத். இத்தலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11 ஆயிரத்து 755 அடி உயரத்தில் இமயமலைப் பகுதியில் உள்ளது.
மகாபாரதப் போரில் வெற்றிபெற்ற பாண்டவர்கள் சிவபெருமானை தரிசிப்பதற்காக இமயமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார்கள். கேதார்நாத் பகுதிக்கு அவர்கள் வந்தபோது, சிவபெருமான் காட்சியளித்து உடனே மறைந்துவிட்டார். அவரை மீண்டும் தரிசிப்பதற்காக, பாண்டவர்கள் அங்குள்ள ஒரு குகையில் தியானம் செய்தார்கள். அவர்களுக்கு சிவபெருமான் காட்டெருமை வடிவிலும், ஜோதிர்லிங்கமாகவும் காட்சியளித்தார். அந்த இடம் கேதார்நாத் என்கிறது புராணம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் ஐந்து கேதார்நாத் உள்ள தாக பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் இந்த கேதார்நாத் தலத்தில் சிவபெருமான் எருமைக்கடா உருவில் காட்சியளித்து மறைந்தார். இங்கே அவரது பிருஷ்டபாகம் காணப்படுகிறது. மத்திய மகேசுரம் என்னுமிடத்தில் சிவனுடைய நாபிக்கமலம், அதாவது மத்திய பாகம் காணப்படுகிறது.
துங்கநாத் என்னுமிடத்தில் சிவபெருமானுடைய ஹஸ்தங்கள் இருக்கின்றன. ருத்ரநாத் என்னுமிடத்தில் சிவபெருமானுடைய முகம் காணப்படுகிறது. கல்பேசுவரநாத் என்னுமிடத்தில் சிவபெருமானின் ஜடாபாரம் தரிசனம் தருகிறது.
மேற்கண்ட ஐந்து இடங்களும் புனிதமாகக் கருதப்படுவதால், கேதார்நாத் தலத்திற்கு வருபவர்கள் இங்குள்ள கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். மேலும் அருகில் பாய்ந்தோடும் மந்தாகினி நதியில் நீராடுவார்கள். காசியில் ஓடும் கங்கைக்குச் சமமாகக் கருதப்படுகிறது இந்த நதி. ‘கேதாரம்’ என்ற சொல்லுக்கு, தேவலோகத்திலிருந்து வேகமாக இறங்கிய கங்கா தேவியை சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கி பூலோகத்திற்கு இறக்கியத் திருத்தலம் என்று பொருளாகும்.
திருத்தலங்களில் சிறந்தது கேதாரம் என்று ஈசன் பார்வதி தேவிக்குக் கூறினார் என்கிறது புராணம். கேதார்நாத் தலத்தில் அமைந்துள்ள கோவிலில் இறைவன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மேலும், இக்கோவிலில் கேதாரகௌரி, விநாயகர், கார்த்திகேயன், நந்தி, விஷ்ணு ஆகியோருக்கும் பாண்டவர்கள், திரௌபதி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கு எழுந்தருளியுள்ள விஷ்ணுவை தரிசித்தால் பத்ரி நாராயணம் சென்ற பலனுண்டு. இந்த ஆலயத்தின் பின்புறம் செல்லும் காட்டு வழியே சென்றால் பத்ரிநாதம் திருத்தலம் சுமார் 33 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு மேலே சென்றால் இயற்கையன்னையின் கோவிலை தரிசிக்கலாம். அங்கே சிவபெருமான் எருமை மேல் அமர்ந்து அருள் புரிகிறார்.இவரைத் தொட்டுத் தழுவி வழிபடலாம். இதனால் எம பயம் இல்லை.
கேதார்நாத் தலத்திலுள்ள கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பல குகைகள் உள்ளன. அந்தக் குகைக்குள் தியானம் செய்வதற்கான அறை போன்ற அமைப்பிலும், அதற்குள்ளேயே தங்கி ஓய்வெடுக்க ஓர் அறை போன்றும் இடவசதி உள்ளது என்கிறார்கள். வசதி படைத்தவர்கள் அங்கே குகைக்குள் தங்கி தியானம் மேற்கொள்கிறார்கள். அவர்களின் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் வெற்றிபெறுவதாகச் சொல்லப்படுகிறது.
கேதார்நாத் திருத்தலத்தில் அமைந்துள்ள ஆலயம் பனிப்பாறைகள் சூழ்ந்த இடமென்பதால், ஏப்ரல் மாதத்திலிருந்து தீபாவளி வரை ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் யாத்திரை வருவது வழக்கம்.
இதேபோல் ஒரு குறிப்பிட்ட காலம்வரை திறந்திருக்கும் கோவில்களும் இமயமலைப் பகுதியில் உள்ளன. அதில் அமர்நாத் திருத்தலம் மிகவும் புகழ்பெற்றது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகையில் இயற்கையாகவே உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். பக்தர்கள் தங்கள் உடல்நலத்தை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொண்டு, இந்தப் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அமர்நாத் யாத்திரை செல்ல அரசு அனுமதிக்கிறது. இந்த (2019) ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை அமர்நாத் குகைக்குள் எழுந்தருளும் பனி லிங்கத்தை தரிசிக்க உகந்த காலம். மற்ற மாதங்களில் யாத்திரிகர்கள் அங்கு செல்ல முடியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவும், பனிப்பாறைகளும் காட்சியளிக்கும்.
அமர்நாத் குகை 150 அடி அகலம், 150 அடி நீளம், 150 அடி உயரம் கொண்டது. மேற்கூரையிலிருந்து தண்ணீர் குகையின் பின்புறமுள்ள பாறையின் நடுவில் கொட்டித் தோய்ந்து பனிக்கட்டியாக மாறி பெரிய சிவலிங்க ரூபத்தில் காட்சியளிக்கும். இந்தக் குகைக்குள் தவம் செய்யவோ, தியானம் செய்யவோ அனுமதியில்லை.
உறைபனியான சிவலிங்கத் தோற்றத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், அது ஒவ்வொரு அமாவாசைக்கு மறுதினத்தன்றும் காட்சியளிக்கத் தொடங்கி, பௌர்ணமியன்று முழு வடிவத்துடன் காட்சியளிக்கும். மறுநாள் முதல் அதன் வடிவம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டு வந்து அமாவாசையன்று மறைந்துவிடும். இந்தப் பனிலிங்கம் எப்படி வளர்கிறது? எப்படி குறைகிறது என்பது விவரிக்க முடியாத பெரும் விந்தையாக இருக்கிறது. இந்தப் பனி லிங்கத்தின் நிறம் மிகப் பிரகாசமாகத் திகழும். மேலும், அந்தப் பனி லிங்கம் உள்ள குகைக்குள் ஒரு ஜோடிப் புறாக்கள் இருக்கின்றன. இந்தப் புறாக்களும் வழிபடப்படுகின்றன. இதனை தரிசித்தால்தான் புனிதம் கிட்டும் என்பது ஐதீகம்.
மேற்கண்ட அற்புதமான, குறிப்பிட்ட காலம் வரை தரிசிக்க இயலும் கேதார்நாத் மற்றும் அமர்நாத் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனை வழிபட வாழ்வில் புனிதம் சேரும். இறுதிக் காலத்தில் சொர்க்கலோகத்தில் ஓரிடம் கிடைக்கும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.