மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தமிழ்க்கடவுள் முருகன் குறித்தும், குன்றத்தூர், திருப்போரூர் ஆகிய ஊர்கள் உருவான விதம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
தமிழர்கள் காதலையும் வீரத்தையும் இரு கண்களாகக் கருதியவர்கள். தங்கள் இலக்கியங்களை அகம், புறம் என்று இரண்டாக வகுத்தவர்கள். காதலையும் வீரத்தையும் மதித்தார்கள் என்பதைவிட அதை தங்கள் வாழ்க்கையிலும் கடைபிடித்தார்கள். தாங்கள் கடைபிடித்தது மட்டுமில்லாமல், தாங்கள் வழிபடுகிற கடவுளும் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதனால்தான் மற்ற கடவுளைவிட முருகனை அதிகம் வழிபட்டார்கள்.
அறுபடை வீடுகளில் மக்கள்கூட்டம் அலைமோதுகிறது. அலை மேவும் கடலோர திருச்செந்தூரில் அலைகள் ஆர்ப்பரிப்பதைப்போல மக்கள்கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. அம்மையப்பனாக கடவுளைப் பார்த்தவர்கள், அண்ணன் தம்பியாக கடவுளைப் பார்த்தவர்கள் முருகனை தங்களுடைய பண்பாட்டின் அடையாளமாகப் பார்த்ததால்தான் வள்ளி தெய்வானை திருமணத்திற்கு இந்த நாட்டில் பெரிய மரியாதையுள்ளது. முருகன் தெய்வானையை மட்டும் மணமுடித்தவன் அல்ல; காட்டுக்குறத்தி வள்ளியையும் திருமணம் செய்தவன். தங்கள் அனுபவித்த காதலை இறைவன் மீதும் பொருத்திப் பார்த்த தமிழர்களின் நாகரிகம் பண்பட்டது.
தமிழர்களின் போர்க்குணம் உலகத்தையே திகைக்க வைத்தது. கனகன், விஜயன் என்ற வடநாட்டு மன்னர்கள் தமிழ் மன்னர்களை இழித்துப் பேசினார்கள் என்ற செய்தியறிந்து இங்கிருந்து படையெடுத்துச் சென்று, அவர்களை வீழ்த்தி, அவர்கள் தலையில் கல்லை ஏற்றி ஆறாயிரம் மைல்கள் நடத்தி அழைத்துவந்து கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டினான் என்பது வரலாறு. வலிய சண்டைக்கு போகமாட்டோம், வந்த சண்டையை விடமாட்டோம் என்பது தமிழர்களின் போர்க்குணத்தில் இருந்த ஒரு அம்சம். அதைப்போலத்தான் முருகன் போர் புரிந்தான்.
அசுரர்களின் அழிச்சாட்டியத்தால், அட்டகாசத்தால் மக்கள் அவதிக்குள்ளான சமயத்தில், அந்த அசுரர்களுக்கு முடிவு கட்டவேண்டும் என்று முருகன் போர்க்களத்திற்கு வந்தான். கிழக்கு கடற்கரையில் உள்ள திருப்போரூரில் போர் நடந்த காரணத்தினால்தான் அந்த ஊருக்கு போரூர் என்று பெயர்வந்தது. அந்தப் போரில் கலந்து கொள்வதற்காக படைகளுடன் புறப்பட்டுவந்த முருகன், சிறிது ஓய்வெடுப்பதற்காக ஒரு குன்றில் அமர்ந்தான். அந்தக் குன்றுதான் குன்றத்தூர் என அழைக்கப்படுகிறது. அந்தச் சிறப்பு மட்டும் குன்றத்தூருக்கு கிடையாது. 63 நாயன்மார்கள் வரலாற்றை கதையாக எழுதி காப்பியமாகத் தந்த சேக்கிழார் பிறந்த ஊரும் அதுதான்.
ஆகவே, தமிழ்நாட்டு பண்பாட்டின் வரலாற்றில் குன்றத்தூருக்கு முக்கிய இடமுண்டு. அதனால்தான் முருகனுக்கு அங்கு ஆலயம் எழுப்பினார்கள். அண்மையில் அங்கு நடந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். போரையும் காதலையும் வாழ்க்கையாக கொண்டிருந்த தமிழர்கள் வாழ்வியலில் ரத்தமும் சதையுமாக முருகன் கலந்துவிட்டான். எனவே தமிழர்கள் யாரை மறந்தாலும் முருகனை மறக்கமாட்டார்கள்.