Skip to main content

படுக்கை அறையில் பணம் இருப்பதால் செல்வம் குறைகிறதா? - ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் விளக்கம்

Published on 31/12/2024 | Edited on 31/12/2024
astrologer lalgudi gopalakrishnans explanation 11

ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில் ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன், வீட்டில் செல்வம் குறைவதற்கான காரணத்தை பற்றி நம்மோடு பகிர்ந்துள்ளார்.

செல்வ செழிப்பு குறைவதற்கு காரணம் நீங்கள் செய்யக்கூடிய தவறுதான். சில வீடுகளில் தண்ணீர் குழாய்களின் அமைப்பு சரியாக இல்லாமல் எப்போதுமே தண்ணீர் வீணாகி கொண்டே இருக்கும். தண்ணீர் வீணாகும் வீட்டில் தனபாக்கியம் கண்டிப்பாக குறைந்து எந்தவித முன்னேற்றமும் இருக்காது. அதுபோல எவ்வளவு பணம் வந்தாலும் அந்த வீட்டில் பணம் நிக்காமல் நஷ்டமாகத்தான் செய்யும். வெள்ளிக்கிழமை காலையில் முதல் காரியமாக கல் உப்பு வாங்குவது செல்வத்தை அதிகப்படுத்தும் அல்லது மகாலட்சுமியை உங்கள் வீட்டிற்கு வரவேற்பதற்கு சமம்.

வெள்ளிக் கிழமை குபேர பூஜை செய்வது மிக மிக முக்கியமானது. குபேர பூகையென்றால் காலையில் எழுந்து பூஜை அறையை சரிசெய்து, விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு தாம்பூலம் தட்டில் குபேர எந்திரத்தை வைக்க வேண்டும். குபேர எந்திரத்திற்கு அருகில் ஐந்து முகமுள்ள விளக்கை ஏற்ற வேண்டும். பின்பு சாமந்தி பூவால் ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திரத்தை மனதில் நினைத்துக்கொண்டு, அதை பூஜை செய்ய வேண்டும். இதுபோல் தொடர்ந்து மூன்று வெள்ளிகிழமை பூஜை செய்தால் வீட்டில் தனபாக்கியம் உண்டாகும். இந்த பூஜை செல்வத்துக்கு மிக முக்கியமானது.

அடுத்ததாக யானை மாலை போடுவதுபோல் உள்ள கஜலட்சுமி படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும். இதுவும் மிக முக்கியமானது. காரணம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் அருள் இருந்தால்தான் உங்களுக்கு நல்ல விதமான விஷயங்கள் நடக்கும். செவ்வாய் கிழமையில் பழைய கடன்களை தீர்ப்பது மிக அவசியம். அந்த கிழமையில் கடன் வாங்கியதில் ஒரு பகுதியை திருப்பி கொடுப்பது, கடனை முழுமையாக அடைப்பதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்கும். வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மகாலட்சுமி வர ஏதுவாக இருக்கும்.

படுக்கை அறையில் பணம் பெட்டி இருப்பது சிறந்தது அல்ல. காரணம் அந்த அறையில் இருக்கும் சூழல் மகாலட்சுமிக்கு உகந்ததாக இருக்காது. பணப் பெட்டியில் கும்கும பூ, பச்சை கற்பூரம் போன்ற வாசனையான பொருட்களை போட்டு வைத்தால், தனபாக்கியம் அதிகமாகும். அரிசி வைக்கும் பெட்டியில் இரண்டு துளசி இலைகளை போட்டு வைத்தால் உங்களுக்கு பலவித நன்மைகளும் தனபாக்கியமும் வரும். இதுபோன்ற தனபாக்கியத்திற்கான பரிகாரங்களை சரியாக செய்யும்போது செல்வ செழிப்பு அதிகமாகும். வெள்ளிக் கிழமை மாலை நேரத்தில் சந்தோஷி மாதாவை பூஜை செய்தால் எல்லா விதத்திலும் வெற்றியும் பண வரவும் கிடைக்கும்.