Skip to main content

இராமரை தொடர்ந்து யோகாவை சொந்தம் கொண்டாடும் நேபாள பிரதமர்!

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

kp sharma oli

 

நேபாள நாட்டின் பிரதமராக இருப்பவர் கே.பி. சர்மா ஓலி. சில மாதங்களுக்கு முன்பு இவர், இராமர் நேபாளத்தில் பிறந்தவர் என கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தநிலையில், நேற்று (21.06.2021) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்புரையாற்றிய கே.பி. சர்மா ஓலி, யோகாவையும் தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "இந்தியா ஒரு தேசமாக உருவாவதற்கு முன்பே, நேபாளத்தில் யோகா பயிற்சி செய்யப்பட்டது. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா உருவாக்கப்படவில்லை. அப்போது இந்தியா என்பதுபோன்ற எந்த நாடும் இல்லை. பல ராஜ்ஜியங்களே இருந்தன. எனவே, யோகா நேபாளத்திலோ அல்லது உத்தரகண்ட் பகுதியிலோ தோன்றியது. யோகா இந்தியாவில் தோன்றவில்லை" என கூறியுள்ளார்.

 

தொடர்ந்து கே.பி. சர்மா ஓலி, "யோகாவைக் கண்டுபிடித்த எங்கள் முனிவர்களுக்கு நாங்கள் ஒருபோதும் அதற்கான பெயரை வழங்கவில்லை. பேராசிரியர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளைப் பற்றி நாங்கள் எப்போதும் பேசுகிறோம். ஆனால் (யோகா மீதான) எங்கள் உரிமையை சரியாக முன்வைக்க முடியவில்லை. எங்களால் அதை உலகம் முழுவதும் எடுத்து செல்ல முடியவில்லை. இந்தியப் பிரதமர் மோடி, வடக்கு அரைக்கோளத்தில், ஆண்டின் மிக நீண்ட நாளில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட முன்மொழிந்து யோகாவைப் பிரபலமாக்கினார். பின்னர் அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது" எனவும் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்