அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்றுக்கொண்டார். அதிபராக பதவியேற்றுக்கொண்டது முதல் ஜோ பைடன், அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவுகளை மாற்றியமைத்து வருகிறார்.
அந்த வகையில், ஈரான், ஈராக், சிரியா, சோமாலியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அமெரிக்கா வருவதற்கு ட்ரம்ப் விதித்த பயணத்தடையை ஜோ பைடன் நீக்கி உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் இதுதொடர்பாக ட்ரம்ப், ஜோ பைடனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், " அதிபர் பைடன் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தில் இருந்து அமெரிக்காவை பாத்துக்க விரும்பினால், வெளிநாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை மீண்டும் கொண்டு வர வேண்டும். மேலும் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான சோதனை முறைகளை, நான் வெற்றிகரமாக அமல்படுத்திய அகதிகள் கட்டுப்பாடுகளோடு மீண்டும் அமல்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் ட்ரம்ப், "தீவிரவாதிகள் உலகம் முழுவதும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இணையதளம் மூலம் தீவிரவாத குழுக்களுக்கு ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் நாட்டிலிருந்து விரட்ட விரும்பினால், நமக்கு புத்திசாலித்தனமான, பொது அறிவுடன் கூடிய விதிமுறைகள் அமலில் இருக்க வேண்டும். அதற்கு எனது பதவிக்காலத்திற்கு முன்பு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் செய்த குடியுரிமை தொடர்பான தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.