போர்ப்ஸ் பத்திரிக்கை, 'உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலை' ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான உலகத்தின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை நேற்று வெளியிட்டது. இதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். அவரின் சொத்துமதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், இரண்டாம் இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார். கடந்தாண்டு இவர் 31 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் தற்போதைய சொத்துமதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி, 10 ஆம் இடத்தில் உள்ளார். மேலும், அவர் சீனா கோடீஸ்வரர் ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் ஆசியாவின் பெரும்பணக்காரர் அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பு, 84.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தை கௌதம் அதானி, பிடித்துள்ளார். அவரின் சொத்துமதிப்பு 50.5 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்தியாவில் பில்லியன் டாலர்களுக்கு மேல் 140 பேர் சொத்து வைத்துள்ளனர். இதன்மூலம் அதிக பணக்காரர்களைக் கொண்ட பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.