கரோனா தொற்று, உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ள அதேவேளையில், கரோனா தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இங்கிலாந்து நாட்டில், தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துவிட்டாலும், லண்டனில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து லண்டனில் நாளை (16 ஆம் தேதி) முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டிலும், கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, அங்கும் நாளை முதல் ஊரடங்கு அமலாகும் என்றும், அத்தியாவசிய கடைகளும், வாரசந்தைகளும் மட்டுமே திறக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யாவிலும் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில், 28 ஆயிரத்து 80 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் பைசர் நிறுவனத்தின், தடுப்பூசியைப் பயன்படுத்தும் நிலையில், ரஷ்யா அவர்களது சொந்த தயாரிப்பான ஸ்புட்னிக் 5 என்ற கரோனா தடுப்பூசியைத் தயாரித்து, மக்களுக்கு செலுத்தி வருகிறது. இருப்பினும், ரஷ்யாவின் 84 மாகாணங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்தநாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.