Skip to main content

ஆப்கானில் பெண்களின் குரல்களும், சிறுபான்மையினரின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் - ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

india representative to un

 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்தநாட்டில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் அதனைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 31-வது சிறப்பு அமர்வின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

 

இந்த சிறப்பு அமர்வில் பேசிய ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திர மணி பாண்டே, ஆப்கான் பெண்களின் குரல்களும், சிறுபான்மையினரின் உரிமைகளும் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திர மணி பாண்டே மனித உரிமைகள் கவுன்சிலில் பேசியது வருமாறு:

 

ஆப்கானிஸ்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து அனைவரும் கவலை கொண்டுள்ளோம். ஆப்கானிஸ்தான் மக்கள், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை மதிக்கப்படுமா என்று கவலை கொண்டுள்ளார்கள்.

 

ஆப்கானிஸ்தானுடனான எங்களது பல்லாயிரம் ஆண்டுக்கால நட்பு, மக்களிடையேயான உறவு என்ற வலுவான தூணில் அமைந்துள்ளது. இந்தியா எப்போதும் அமைதியான, வளமான மற்றும் முன்னேறும் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள எங்களது நண்பர்களின் அபிலாஷைகள் நிறைவேறுவதற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. ஆப்கான் பெண்களின் குரல்களும், சிறுபான்மையினரின் உரிமைகளும், குழந்தைகளின் ஆசைகளும் மதிக்கப்பட வேண்டும்.

 

நாம் ஒரு சர்வதேச சமூகமாக, ஆப்கானிஸ்தான் மக்களின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முழு ஆதரவை உறுதி செய்ய வேண்டும். பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து ஆப்கான் மக்களும் அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழ வழிவகுக்க வேண்டும்.

 

ஆப்கானிஸ்தானின் நிலைமை அண்டை நாடுகளுக்குச் சவாலாக இருக்காது என்றும், ஆப்கான் நிலப் பரப்பை ஜெய்ஷ் இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் வேறு எந்த நாட்டையும் அச்சுறுத்தப் பயன்படுத்தாது என்றும் நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு இந்திர மணி பாண்டே கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்