Skip to main content

பாகிஸ்தான் பொதுத் தேர்தல்; யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
An unexpected twist on Pakistan General Election

பாகிஸ்தானில் நேற்று (08-02-24) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக் - இ - இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், அவரது மனைவி  புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

இதனையடுத்து, இங்கு பொதுத் தேர்தல் நேற்று (08-02-24) நடைபெற்றது. மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். அதன்படி, காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலையொட்டி நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும், பாதுகாப்பிற்காக போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் எனப் பல்வேறு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 84 இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 59 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 44 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனிடையே, எந்த கட்சியுடனும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கமாட்டோம் என இம்ரான் கான் கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.