அமெரிக்காவின் தேச பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு தடை விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது பலரது வரவேற்பையும் பெற்றது. அந்த சமயத்தில் இருந்தே அமெரிக்காவிலும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன என்பது போன்ற தகவல் வெளியாகின. அதனை உறுதி செய்யும் வகையில் அதிபர் ட்ரம்ப் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், 'சீன நிறுவனங்களின் செயலிகள் அமெரிக்காவில் வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் டிக்டாக், வீசாட் செயலிகள் பயனாளர்களின் தகவல்களை எடுத்துக்கொள்வது தெரியவருகிறது. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய ஒன்றாக மாறிவிடும். இந்த செயலிகள் மூலம் அமெரிக்க மக்களின் தனிநபர் விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை அங்குள்ள கம்யூனிச கட்சிகளால் அறிந்து கொள்ளமுடியும். எனவே இந்த இரு செயலிகளுக்கும் அமெரிக்காவில் தடை விதித்து உத்தரவிடுகிறேன்' எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடையானது அடுத்த 45 நாட்களில் அமலுக்கு வர இருக்கிறது.