சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லி முழுவதும் பதட்டமான சூழலை சந்தித்தன. இந்நிலையில், டெல்லியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என இந்திய அரசியல்வாதிகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணைய தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஜெனீவா நகரில் கடந்த 24ந்தேதி தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் 43வது கூட்டத்தொடரில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மிச்சேலே பாக்லெட், "கடந்த வருடம் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பெரும்பாலான இந்தியர்களும், பெருமளவில் அமைதியான முறையிலேயே இச்சட்டத்திற்கு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். மேலும், இந்தியாவில் நீண்டகாலமாக இருந்து வந்த மதசார்பற்ற கலாசாரத்திற்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக பிற குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலின்பொழுது, போலீசார் செயல்படாதது பற்றியும், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது போலீசார் கூடுதல் படைகளை பயன்படுத்தியது பற்றியும் அறிக்கைகள் மூலம் அறிந்தேன். இது வருத்தமளிக்கிறது. இந்த வன்முறையை தடுக்க வேண்டும் என இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" என தெரிவித்தார்.