வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அதிபர் ட்ரம்புக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 76,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் உதவியாளர் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிபர் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் பென்ஸ் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முடிவுகள் நெகடிவ் என வந்துள்ள சூழலில், இனி தினமும் பரிசோதனை செய்துகொள்ளப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை ஓவல் அலுவலகத்தில் டெக்ஸாஸ் ஆளுநருடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தான் அந்த நபருடன் தொடர்பிலிருந்துள்ளதால் இனி தினமும் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.