ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார்.
ரஷ்ய நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கரோனா பரவல், தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். மேலும், இதுகுறித்த தகவலை காணொளிக்காட்சி மூலம் அதிபர் புதினிடம் தெரிவித்தார். அப்போது மிகலிடம் பேசிய அதிபர் டிரம்ப், "ரஷ்யப் பிரதமர் மிகைல் விரைவில் குணமடைந்துவிடுவார் என நம்புகிறேன். ரஷ்யப் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான பணிகளிலும், கொள்கைகளை உருவாக்குவதிலும் அவர் தொடர்ந்து ஈடுபடுவார் என நம்புகிறேன்.
உங்களுக்கே கரோனா வைரஸ் பாதிப்பு என்றால், இனி யாருக்கு வேண்டுமானாலும் அது தாக்கலாம். உங்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்பாக இருக்கக் கேட்டுக்கொள்கிறேன். முடிந்தவரை யாருடனும் நேரடியாகப் பேசாமல் காணொலி மூலம் ஆலோசனை நடத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யப் பிரதமர் கரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியறிந்த இந்தியப் பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், "ரஷ்யாவின் பிரதமர் மிஷுஸ்டின், விரைவாக மீண்டு, நல்ல ஆரோக்கியத்தைப் பெறவேண்டும் என நான் மனதார விரும்புகிறேன். இந்தியாவின் நெருங்கிய நட்புநாடான ரஷ்யாவுடன் இந்த நேரத்தில் தோளோடு தோள் நிற்போம். நாம் COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.