அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி எனும் பட்சத்தில், டொனால்ட் டிரம்ப் 295 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராகிறார். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக ஒரு பெண்ணை நியமித்துள்ளது என ட்ரம்ப் சில அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். வரலாற்றில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக ஒரு பெண்ணை நியமித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதனிடையே 3 ஆண்டுகளை கடந்து நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நிறுத்த நடவடிக்கைகளை எடுப்பார் என்று பலரும் எதிர்ப்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு ட்ரம்ப் பேசியுள்ளார். அந்த உரையாடலின் போது உக்ரைன் மீதான போரை ரஷ்ய தீவிரப்படுத்த வேண்டாம் என்றும், இரு நாடுகளும் போரை கைவிட வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.