அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் தோல்வியடைந்துள்ளது.
அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட உள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து தகவல்களை திரட்டுமாறு உக்ரைன் நாட்டு அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாகவும், மேலும் தகவல்களை திரட்டி கொடுக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவி கிடைக்காது என மிரட்டியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனையடுத்து டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் எதிர்கட்சிகளால் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல்கட்டமாககடந்த டிசம்பர் மாதம் இந்த தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மீள்சபையான செனட் சபையில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று, டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை இருப்பதால், இந்த தீர்மானம் எளிதாக தோற்கடிக்கப்பட்டது. 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் பதவி நீக்க தீர்மானம் தோல்வி அடைந்தது.