அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்திற்குக் குறைவான நாட்களே இருப்பதால் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவிற்கும், குறிப்பாக சென்னைக்கும் அவருக்கும் இடையான உறவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமலா ஹாரிஸ் மட்டுமல்ல அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடனே இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது போன்ற சுவாரசியத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜோ பைடனின் மூதாதையரான ஜார்ஜ் பைடன் கிழக்கிந்திய கம்பெனியில் கேப்டனாகப் பணியாற்றி, பணி ஓய்வுக்குப் பிறகு இந்தியா வந்ததாகவும், பின் இந்தியப் பெண்ணை மணந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் 1972 -இல் செனட் உறுப்பினராகத் தேர்வான பொழுது இந்தியாவிலிருந்து பைடன் என்ற பெயரில் அவருக்கு வாழ்த்துக் கடிதம் வந்ததையும், அந்தக் கடிதத்தில், தான் உங்களது உறவினர் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது எனவும் ஜோ பைடன் இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் உரையாற்றும் போதெல்லாம் நினைவு கூர்ந்துள்ளார்.
டிம்பில் விளாசே வில்சே என்ற லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் எழுதியுள்ள 'ஜோ பைடனின் இந்தியத் தொடர்பு' என்ற கட்டுரையில், 1,700 -களில் கிறிஸ்டோபர் பைடன் என்ற கேப்டன் பற்றியும், அவருடைய சென்னை வாழ்க்கை பற்றியும் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார். அதேபோல் ராயபுரம் பகுதியில் அவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஒருவேளை அதிபர் வேட்பாளரான ஜோ பைடனின் மூதாதையர்கள் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டால், அவர் கிறிஸ்டோபர் பைடனின் வழித் தோன்றலாகத் தான் இருக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.