Skip to main content

இஸ்ரேல் போரில் சிக்கிய திருச்சி பெண்; மனைவியை மீட்டு வர கணவர் கோரிக்கை

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Trichy woman trapped in Israel

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

 

மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த பொதுமக்கள் பலரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கடுமையான பதிலடிகளை இஸ்ரேல் தரப்பு கொடுத்து வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

 

இந்தப் போரினால் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் 3 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாகவும், திருச்சி பேராசிரியை ஒருவர் இஸ்ரேலில் பதுங்கு குழியில் வாழ்ந்து வருவதாகவும் செய்தி வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த பல பேர் அந்த போரில் சிக்கி தவித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. 

 

இந்த நிலையில், திருச்சி பேராசிரியரின் கணவரும், திருச்சி வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறையின் தலைவருமான ரமேஷ்,  தனது மனைவியை மீட்டு அழைத்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “எனது மனைவி ராதிகா திருச்சி வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் இணை பேராசிரியராக இருக்கிறார். அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பயிற்சிக்காக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார். தற்போது ஏற்பட்ட போர் சூழலில் அங்கு சிக்கியுள்ளார். தொடர்ந்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்பதாகத் தெரிவித்தார். இதனால், அவர் தங்கி உள்ள இடத்தில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளார். எனவே, எனது மனைவியை பத்திரமாக மீட்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்