உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் பல நாடுகளில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்ய அதிபர் புதின், கரோனா தடுப்பூசியை தங்கள் நாட்டில் கண்டுபிடித்து விட்டதாகவும் அதை தன்னுடைய மகளுக்கே செலுத்தி சோதனை செய்ததாகவும், அதில் வெற்றியும் கண்டதாக அறிவித்தார். விரைவில் இந்தத் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அறிவித்தார். இதனால் கரோனா பீதியில் இருந்த மக்கள் சற்று ஆறுதலடைந்தனர்.
இந்நிலையில் இத்தடுப்பூசி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, மேலும் தடுப்பூசிகளுக்கான ஆய்வுகள் மொத்தம் ஒன்பது கட்டமாக நடைபெறுகின்றன. அதில் எதிலும் ரஷ்யாவின் தடுப்பூசி குறித்த விவரங்கள் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பு மீண்டும் மக்களைக் குழப்பமடையச் செய்தது. இதனால் இத்தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருமா இல்லையா என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.
'ஸ்புட்னிக்-v' என்று பெயரிடப்பட்ட அந்தத் தடுப்பூசி தற்போது பொது பயன்பாட்டிற்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேவையான சோதனைகள் அனைத்தையும் வெற்றிகரமாக கடந்துவிட்டதால் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இதன் முதல் தொகுப்பு விரைவில் ரஷ்யா மக்களுக்கு கிடைக்கும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.