டிக்டாக் செயலியானது சமூக வலைத்தளவாசிகளால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஒரு பொழுதுபோக்குச் செயலியாகும். இது உலக அளவில் புகழ் பெற்றது. சில மாதங்களுக்கு முன்னால் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்தியா, சீனா எல்லை மோதலையடுத்து இந்தியாவின் பாதுகாப்பு கருதி டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் சில வாரங்களுக்கு முன்னால் டிக்டாக்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. உலகின் பிரதான இரண்டு நாடுகளில் விதிக்கப்பட்டத் தடையானது பொருளாதார ரீதியாகப் பெரும் சரிவை டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்படுத்தியது. இந்நிறுவனம் இரு நாடுகளிலும் இத்தடையை நீக்கக்கோரி பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கெவின் மேயர் அப்பதவியில் இருந்து விலகுவதாக பைட்டன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து கெவின் மேயர் ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "கனத்த இதயத்துடன் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன். என் முடிவை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.
டிக்டாக் நிறுவனத்தின் மேலாளராக இருந்த வனீசா பப்பாஸ், தற்காலிக சி.இ.ஒ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.