கரோனா தடுப்பூசி தொடர்பாகத் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சித் தொகுப்பாளர் விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக இவான்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் வைத்துவரும் சூழலில், விரைவாகத் தடுப்பூசியைப் பொதுமக்களுக்கு வழங்க அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டு வருகிறார். ஆனால், தடுப்பூசி விவகாரத்தை அரசியல் லாபத்திற்காக ட்ரம்ப் பயன்படுத்துவதாக அவர்மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவான்காவிடம், பேட்டி எடுத்த தொகுப்பாளர் இவான்கா தடுப்பு மருந்தை ஏற்றால் தானும் ஏற்பதாகக் கூறினார். இதனைக்கேட்டு சற்றும் தாமதிக்காது இவான்கா, தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதாகவும், அதனையும் தொலைக்காட்சி நிலையத்திலேயே வந்து எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்தார்.