பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் முதல் மனைவியின் மகன் சலா கஷோகி, தன் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டதாகக் கூறியதையடுத்து குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரசையும் அதன் இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளர் ஜமால் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்.2 -ஆம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களைப் பெறத் துருக்கி சென்றார். அங்கு இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் அவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் எட்டு பேர் குற்றவாளிகள் என்று சவுதி நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. மேலும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்ற தீர்ப்பின்படி, குற்றவாளிகளான எட்டு பேரில் ஐந்து பேர் தூக்கிலிடப்படுவார்கள் எனவும், மேலும் மூன்று பேர் 24 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், எட்டு பேர் மீதான குற்றம் மட்டுமே நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில், ஜமால் கஷோகியின் முதல் மனைவியின் மகன் சலா கஷோகி, தன் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டதாகக் கூறியதையடுத்து குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, 20 ஆண்டுக்காலம் சிறைத் தண்டனை வழங்கி சவுதி நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அதேபோல 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட மூவருக்கும் தண்டனை காலம் குறைக்கப்பட்டு, 7 முதல் 10 ஆண்டுக் கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.