பட்ஜெட் வாசிப்பின்போது தாய்லாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் ஆபாசப்படம் பார்க்கும் காட்சி இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த கூட்டத்தின்போது பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. அப்போது ரொன்னாதேப் அனுவத் என்ற எம்.பி. நீண்ட நேரம் தன்னுடைய செல்போனில் எதையோ பார்த்தபடி இருந்துள்ளார். பிறகு அவர் செல்போனில் ஆபாசப்படம் பார்ப்பதை அங்கிருந்தவர்கள் கண்டறிந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், தனக்கு வந்த செய்தி ஒன்றில் பெண் ஒருவர் அவசரமாக உதவி கேட்டதாகவும், அந்த செய்தியுடன் ஒரு புகைப்படம் ஒன்றையும் அந்த பெண் அனுப்பியிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அதைத் திறந்து பார்த்தபோது ஆபாச புகைப்படம் இருந்ததாகவும், இதை வைத்து அந்த பெண் ஆபத்தில் இருக்கிறாரா, வற்புறுத்தப்படுகிறாரா? என்ற ரீதியில் ஆராய்ந்து வந்ததாகவும் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் செயலையும், அதற்கான அவரது விளக்கத்தையும் தாய்லாந்து மக்கள் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று சபாநாயகர் சுவான் லீக்பாய் தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை மேலும் பெரிதாக்கியுள்ளது.