தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் தாய்லாந்து நாட்டில் பணி செய்ய சென்றனர். அங்கிருந்து அவர்கள் முறைகேடாக மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத பணிகளை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும், பணி செய்ய மறுத்தால் அந்த கடத்தல் கும்பல் இவர்களை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த விவகாரம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் இருந்து சென்ற 300 நபர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 13 பேர் இருந்தனர்.
தமிழர்கள் மியான்மரில் சிக்கி தவிக்கும் விவகாரத்தை அறிந்ததும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு தமிழர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதினார். இந்நிலையில் இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ள 20 தமிழர்களை மீட்டு வருவதற்கான உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை எடுத்த பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்ப அதற்கான டிக்கெட் உள்ளிட்ட செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் மியான்மரில் சிக்கி தவித்திருந்த 13 தமிழர்கள், இன்று தாயகம் திரும்புகின்றனர். 13 தமிழர்களும் ஹாங்காங்-லிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்புகின்றனர். இவர்கள் இன்று இரவு இந்தியா வந்தடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.