ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
தலிபான்களுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும். இதனால் தற்போது இராணுவம் மூலம் மீட்புப் பணிகளை நடத்திவரும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மீட்புப் பணிகளை முடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் ஆப்கன் விவகாரம் குறித்து பேசிய ஜோ பைடன், மீட்புப் பணிகளுக்கான கால அளவை நீட்டிக்க ஆலோசனை நடத்திவருவதாக தெரிவித்தார். இந்தநிலையில், மீட்புப் பணிகளுக்கான கால அளவை நீட்டித்தால் பின்விளைவுகள் ஏற்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், "ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மீட்புப் பணிகளை முடிக்காவிட்டால், அவர்கள் ஆக்கிரமிப்பை நீட்டிப்பதாக அர்த்தம். அமெரிக்காவோ, இங்கிலாந்தோ மீட்புப் பணிகளுக்குக் கூடுதல் அவகாசம் கேட்டால், அவர்களுக்கான பதில் முடியாது என்பதுதான். மீட்புப் பணிகளை நீட்டித்தால் பின்விளைவுகள் ஏற்படும். அவர்கள் ஆக்கிரமிப்பை தொடர விரும்பினால் அது எதிர்வினையை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிக்க ஜி-7 நாடுகள் இன்று (24.08.2021) கூடுகின்றன. இந்தக் கூட்டத்தில் தலிபான்களுக்குப் பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து பேசப்படலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.