2019ஆம் ஆண்டு தொடங்கிய கரோனா பரவல், 2020ஆம் ஆண்டுமுதல் உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. மேலும் பல்வேறு வகையான மரபணு மாற்றங்களையும் அடைந்துள்ளது. இவ்வாறு மரபணு மாற்றமடைந்த கரோனாக்களில் டெல்டா வகை கரோனா, உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் இரண்டாவது அலை ஏற்படவும் டெல்டா வகை கரோனா காரணமாக அமைந்தது.
இந்தநிலையில், லாம்ப்டா என்ற மரபணு மாற்றமடைந்த கரோனாவின் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பெரு நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட இந்த லாம்ப்டா வகை கரோனா, அந்த நாட்டில் 81 சதவீத கரோனா பாதிப்புகளுக்கு காரணமாக இருந்தது தெரியவந்துள்ளது. பெரு நாட்டில் கரோனா உயிரிழப்புகளின் சதவீதம் அதிகமாக இருந்துவருவதும் இங்கு கவனிக்கத்தக்கது. உலக சுகாதார மையமும் லாம்ப்டாவைக் கண்காணிக்கப்பட வேண்டிய கரோனாவகையாக அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில்தான் லாம்ப்டா கரோனா வைரஸ் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட உலகின் 30 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை உருவாக்கியுள்ளது. லாம்ப்டா கரோனாவின் 'ஸ்பைக் ப்ரோட்டினில்' ஏழுவகை மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி இந்த லாம்ப்டா வகை கரோனா, டெல்டா வகை கரோனாவைவிட அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரித்துள்ளனர். அதேநேரத்தில் இந்த லாம்ப்டா வகை கரோனா அதிகம் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என சில நிபுணர்கள் கூறியுள்ளனர். லாம்ப்டா வகை கரோனா இதுவரை இந்தியாவில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.