இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டுவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், தங்களது கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு வருவதற்கும், ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலிருந்து இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்குச் செல்வதற்கும் வசதியாக ஜூலை 1 முதல் 'கிரீன் பாஸ்' என்ற அனுமதிச் சீட்டு நடைமுறையைச் செயல்படுத்தியது.
ஐரோப்பிய மருந்துகள் முகமையின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த கிரீன் பாஸ் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இதுவரை வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா உறுதியளித்தார். மேலும், ஏற்கனவே கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு ஐரோப்பிய மருந்துகள் முகமையிடம் விண்ணப்பித்துவிட்டதாகவும், ஒரு மாதத்திற்குள் ஐரோப்பிய மருந்துகள் முகமை கோவிஷீல்டிற்கு அனுமதி அளித்துவிடும் எனவும் ஆதார் பூனாவாலா கூறியிருந்தார்.
இந்தநிலையில், "கோவிஷீல்ட் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த அனுமதியளிப்பது குறித்து ஆய்வுசெய்ய, தடுப்பூசி தயாரிப்பாளர் முறையான சந்தைப்படுத்தல் அங்கீகார விண்ணப்பத்தை (marketing authorisation application) எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்த விண்ணப்பம் இப்போதுவரை எங்களுக்கு வரவில்லை" என ஐரோப்பிய மருந்துகள் முகமை கூறியுள்ளது. கோவிஷீல்டிற்கு அங்கீகாரம் கேட்டு ஐரோப்பிய மருந்துகள் முகமையிடம் விண்ணப்பித்துவிட்டதாக ஆதார் பூனாவாலா கூறியிருந்த நிலையில், அதற்குண்டான விண்ணப்பங்களில் ஒன்று இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என ஐரோப்பிய மருந்துகள் முகமை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே 15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் 'கிரீன் பாஸ்' வழங்க முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.