மார்ச் 8 ஆம் தேதியான நேற்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தின விழாக்கள் கொண்டாடப்பட்டது. சமூக மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் பெண்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். நேற்று பெண் போலீசார் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக விடுமுறை அளித்து மதுரை மாநகர காவல்துறை மகளிர் தினத்திற்கு சிறப்பு சேர்த்தது. தமிழக முதல்வரும் பெண்களைப் பாராட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நேற்று மேற்கொண்டார்.
இந்நிலையில், இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சற்று சவாலாகக் கொண்டாடியது. அதாவது வழக்கமாக கொழும்பில் இருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை நேற்று பெண்களே இயக்கினர். பைலட், கோ பைலட் இருவரும் பெண்கள் தான். வழக்கமாக விமானப் பணிப்பெண்கள் மட்டுமே பெண்களாக பணியில் இருப்பார்கள். நேற்று பைலட்டுகளும் பெண்களாகவே இருந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் இந்த விமானம் திருச்சி வந்து தரையிறங்கி பயணிகளை இறக்கிவிட்டது. பின்னர் பெண் பைலட்டுகள், விமான பணிப்பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதே விமானத்தை அவர்கள் மீண்டும் கொழும்புக்கு இயக்கிச் சென்றனர். மகளிர் தினத்தில் பெண் விமானிகளே இந்த விமானத்தை இயக்கி மகளிர் தினத்திற்கு பெருமை சேர்த்தனர். அவர்களுக்கு விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.