விண்வெளித்துறையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ படைத்திருந்த உலக சாதனை ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளித்துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறது. மறுபயன்பாட்டிற்கு உகந்த விண்கலங்களை உருவாக்குவது, மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்றுவரும் விண்கலத்தை உருவாக்குவது என இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், இந்தியாவின் இஸ்ரோ படைத்திருந்த உலக சாதனை ஒன்றை தற்போது இந்நிறுவனம் முறியடித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தன்னுடைய பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. இதுவே ஒரு ராக்கெட்டில் அதிக அளவில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையாக இருந்தது. ஆனால், இந்த சாதனையை தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்துள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட் மூலம் மொத்தம் 143 செயற்கைக்கோள்கள் நேற்று (ஜனவரி 24) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன்மூலம் ஒரே ராக்கெட்டில் அதிக செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய இஸ்ரோவின் சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் தற்போது முறியடித்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த 143 செயற்கைக்கோள்களில் 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இந்த செயற்கைக்கோள்கள், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அடுத்த கனவுத்திட்டமான ஸ்டார்லிங்க் (நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து அதிவேக இணைய சேவை வழங்கும் தொழில்நுட்பம்) திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட உள்ளன.