ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு புறப்பட்ட இரண்டு விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர்.
உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் இணைந்து நேற்று இரண்டு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவரும் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்த இப்பயணத்தின் மூலம், முதன்முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய தனியார் நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ்.
நேற்று பூமியில் இருந்து கிளம்பிய இந்த ராக்கெட், சுமார் 19 மணிநேர பயணத்திற்குப் பின் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தைச் சென்றடைந்தது. ஆய்வு மையத்தை அடைந்த இரண்டு வீரர்களையும், கிறிஸ் காசிடி, அனடோலி இவானிஷின் மற்றும் இவான் வாக்னர் ஆகிய விண்வெளிவீரர்கள் வரவேற்றனர். வெற்றிகரமாக அமைந்த இந்த முதல் பயணத்தை அடுத்து தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளைத் தீவிரட்டுத்த திட்டமிட்டுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.