விலங்கியல் ஆர்வலர்கள், குறிப்பாக யானை பிரியர்களுக்கும் அவ்வளவு எளிதில் மறந்துவிடாத பெயர் 'காவன்' யானை. தனிமையின் வலியால் சுவற்றை முட்டி மோதி நிற்கும் காவனின் புகைப்படம் மிகப் பிரபலம்.
யார்தான் அந்த காவன்... 1985-ஆம் ஆண்டு யானையே இல்லாத சூழலில், ஒரு யானையை வளர்க்க முன்வந்த பாகிஸ்தான், ஒரு வயதுடைய யானையை இலங்கையிலிருந்து வாங்கியது. பாகிஸ்தானிற்கு வந்த அந்த யானைக்கு, 'காவன்' எனப் பெயர் சூட்டப்பட்டு, இஸ்லாமாபாத் மிருகக் காட்சி சாலையில் விடப்பட்டிருந்தது.
ஒரு வயதிலிருந்து அங்கேயே வளர்ந்த காவனுக்குத் துணையாக இலங்கையில் இருந்து 1990 -ஆம் ஆண்டு, 'ஷகவுளி' என்ற பெண் யானை கொண்டு வரப்பட்டது. இவ்வளவு நாள் தனியாக இருந்த காவனுக்கு, புது ஜோடி கிடைத்த சந்தோஷத்தில் இரண்டு யானைகளும் மகிழ்ச்சியாக வளர்ந்து வந்தது. ஆனால், பாகிஸ்தானின் தட்ப வெட்பநிலை யானைகளுக்குச் சிக்கலாக முடிந்தது. சில வருடத்திலேயே 'ஷகவுளி' உயிரிழந்த நிலையில், ஷகவுளியின் மறைவுக்குப் பிறகு 'காவன்' தனிமையிலேயே வாடியது. அதனுடைய கொட்டகையை விட்டு அதிகம் வெளிவராத காவன், தனிமையின் சோகத்தால் தலையைச் சுவற்றில் முட்டி சோகமாக நிற்கும். அந்தப் புகைப்படம் மிகவும் பிரபலமான ஒன்று. அவ்வப்போது 'காவன்' மூர்க்கத் தனத்தையும் வெளிப்படுத்தியது. சில நேரங்களில் மதம் பிடித்தது போல நடந்து கொள்ளும்.
காவனின் தனிமையை உணர்ந்த தன்னார்வலர்களும், விலங்கியல் ஆர்வலர்களும் காவனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். 'காவன்' வாழ்வதற்கான சூழ்நிலைகளைக் கொண்ட இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அதேபோல், அதற்கு ஒரு துணையாவது ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் இந்த வலியுறுத்தல் வழக்காகவே மாறியது. வழக்கில் நீதிபதிகள் காவனை வளர்வதற்கு ஏற்ற சரணாலயத்திற்குக் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டனர். இந்நிலையில், கம்போடியாவில் உள்ள சரணாலயம் ஒன்றிற்குக் காவன் யானை செல்லவுள்ளது. தற்பொழுது, 35 வயதுடைய காவனை, மகிழ்ச்சியுடன் அனுப்பிவைக்க உள்ளனர் விலங்கியல் ஆர்வலர்கள். விமானத்தின் மூலம் பிரத்தியேகமாகக் கூண்டு மூலமாக, காவன் யானை கம்போடியாவுக்குப் பறக்க உள்ளது.
அதற்கான பயிற்சிகளையும், மருத்துவப் பரிசோதனைகளையும் காவனுக்குச் செய்து வருகின்றனர். மறுபுறம், காவனின் பிரியர்கள், அதற்குப் பிரியாவிடையை அளிக்க தினமும் 'சென்ட் ஆஃப்' நிகழ்ச்சிகளைச் செய்து வருகின்றனர். வரும் நவம்பர் 29 -ஆம் தேதி விமானம் மூலம் கம்போடியா செல்ல இருக்கிறது, இந்த 'சிங்கிள்' யானை.