ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள், தங்களது இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான உணவு பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களுக்கு முன்னதாகவே அங்கு 80 சதவீத மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் தவித்த நிலையில், தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு போதுமான உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களின் நிலை 93 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக உணவு திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஆப்கனில் நிலவும் உணவு பஞ்சத்தைத் தீர்க்க உதவும் வகையில், அந்த நாட்டிற்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டின் வழியாக இந்தியாவிற்கு பொருட்கள் வருவதை அனுமதிக்கும் பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து தங்கள் நாடு வழியாக ஆப்கானிஸ்தானுக்குப் பொருட்கள் செல்வதற்கு அனுமதி அளிக்க மறுத்துவருகிறது.
இதனால் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை வழங்குவதில் சிக்கல் நீடித்துவந்தது. இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எந்த முறையில் இந்த கோதுமை கொண்டுசெல்லப்படும் என இறுதியானவுடன், கோதுமையை தங்கள் நாடு வழியாக கொண்டு செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதிக்கும் என அறிவித்துள்ளார்.
அதேபோல், இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்து சிக்கிக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்கள், தங்கள் நாட்டின் வழியாக சொந்த நாட்டிற்குச் செல்லவும் பாகிஸ்தான் அரசு வழி செய்யும் எனவும் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.