உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். அதேசமயம் கரோனா தொற்று விலங்குகளுக்கும் பரவியது. குரங்குகள், புலிகள் ஆகியவற்றுக்கும் கரோனா தொற்று பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேசமயம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், விலங்குகளுக்கு கரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்தநிலையில் ரஷ்யா கடந்த மார்ச் மாதம், விலங்குகளுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. மேலும் அந்த கரோனா தடுப்பூசி நாய்கள், பூனைகள் மற்றும் நரிகள் ஆகிய விலங்குகளின் உடலில், கரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தாக ரஷ்யா கூறியது.
மேலும் இந்த தடுப்பூசி அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளை, கரோனாவிலிருந்து காக்குமென்றும், விலங்குகளில் மரபணு மாற்றமடைந்த வைரஸ் பரவுவதை தடுக்குமென்றும் தெரிவித்த ரஷ்யா, இந்த தடுப்பூசிக்கு கார்னிவாக்-கோவ் என பெயரிடப்பட்டது. இந்தநிலையில் விலங்குகளுக்கு கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை செலுத்தும் பணி ரஷ்யாவின் பல்வேறு மாகாணங்களில் தொடங்கியுள்ளது. விலங்குகள் மீதான தடுப்பூசியின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் ரஷ்யாகூறியுள்ளது. உலகிலேயே முதல்நாடாக ரஷ்யா விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறிப்பிடத்தக்கது.