நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணைவதில் உறுதியாக இருந்து வந்தது. இதையடுத்து ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போரைத் தொடங்கிய நிலையில் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
இந்த போரில் ரஷ்யா சார்பில் ரஷ்ய ராணுவத்தினருடன் இணைந்து வாக்னர் குழுவினர் என்ற பெயரில் ஆயுத குழுவினர் போரில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களை தனியார் ராணுவம் என அடையாளப்படுத்தி வருகிறது. இந்த குழு ரஷ்ய அதிபர் புதினின் நண்பர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் என்பவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழு தற்போது ரஷ்ய நாட்டு ராணுவத்திற்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர். மேலும் ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இது புதினுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ராணுவத்திற்கு எதிராக ரஷ்ய நாட்டின் தெற்கு பகுதியில் இருந்த ராணுவ அலுவலகத்தை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருந்த அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுள்ளன. ரஷ்ய அதிபர் புதின் இது குறித்து உரையாற்றி வருகிறார். ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் தேச துரோகிகள் என தெரிவித்துள்ளார். ஆயுத குழுவினரை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் ஏற்படும் வாய்ப்பு சுழல் நிலவுவதாக கூறப்படுகிறது.