
பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சேமிப்பது, அரசியல் பாரபட்சமுடன் கூடிய தேடல் முடிவுகளை தருவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூகுள் நிறுவனம் மீது சுமத்தப்பட்டு அதற்கான விசாரணை நீதித்துறை குழு முன் நேற்று நடைபெற்றது. இதில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தகவல் திருட்டு, கூகுள் நிறுவனத்தின் அரசியல் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து சுந்தர் பிச்சை பதிலளித்தார்.
அதில் சுந்தர் பிச்சை,"தனி நபர்களின் தகவல்கள் அவர்களது போனில் அமைக்கப்பட்டுள்ள செட்டிங்கை பொறுத்தே கூகுள் பெற முடியும், ஆனால் கிளவுட் மெமரி எனப்படும் இணையத்தில் சேமிக்கப்படும் தகவல்களை கூகுள் பார்க்க முடியும், ஆனால் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு அவ்வாறு செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் கூகுள் நிறுவனம் அரசியல் சார்பற்றது, கூகுள் தேடலின் பொழுது வரும் முடிவுகள் கூகுள் நிறுவனத்தால் முடிவு செய்யப்படுபவை அல்ல எனவும் கூறினார்.
இந்த விசாரணை கூட்டத்தின் பொழுது ஒரு கண்ணில் மட்டும் கண்ணாடி அணிந்து, வெள்ளை மீசையுடன் ஒரு நபர் தொடர்ந்து சுந்தர் பிச்சையை பின்தொடர்ந்துவந்தார். அவர் யார் என்ற தேடலே தற்பொழுது கூகுளில் அதிகமாக உள்ளது. ஆன்லைன் தகவல்கள் திருடப்படுவதற்கு எதிரான ஒரு போராட்ட வகையே இது. மோனோபோலி மேன் (பிரத்தியேக உரிமைக்கான மனிதர்)என அழைக்கப்படும் இந்த வேடமணிந்தபடி தகவல் திருட்டு தொடர்பான வழக்குகளை சந்திப்பவர்களுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம். இந்த வகையில் மோனோபோலி மேன் வகை போராட்டங்கள் ஏற்கனவே இதுபோன்ற தகவல் திருட்டு தொடர்பான வழக்குகள் நடக்கும்போதும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.