ஈரான் நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவதை மத வழக்கப்படி கட்டாயமாக்கப்பட்டு அது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஒழுக்க விதிமுறைகளை இஸ்லாமியப் பெண்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க காவல்துறை குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பொது வெளியில் விதிமுறைகளை மீறி ஆடை அணிந்து வரும் பெண்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்த சூழலில், ஈரான் தெஹ்ரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி உறவினர்களைச் சந்திக்கச் சென்ற 22 வயதான மாஸா அம்னி என்ற பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறப்புப் படை காவல் அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை அவரது பெற்றோரிடம் கொடுக்காமல் காவல்துறையினரே அடக்கம் செய்ததற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஹிஜாப் சட்டத்தை மீறும் பெண்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில், சமீபத்தில் ஹிஜாப் அணியாமல் பொது விழாவில் கலந்து கொண்ட பிரபல நடிகையான அப்சானே பயேகன் உள்ளிட்ட சில பெண்களுக்குக் கடுமையான தண்டனையை ஈரான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பில், 61 வயதான அப்சானே பயேகன் இரண்டு ஆண்டுகளுக்கான சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், வாரத்திற்கு ஒரு முறை உளவியல் மையத்திற்குச் சென்று தன்னைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குடும்ப பழக்க முறைகளுக்கு விரோதமாகச் செயல்படுவதால், தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளைக் கண்டுபிடித்துக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, ஹிஜாப் அணியாமல் பொது வெளியில் வாகனம் ஓட்டி வந்த மற்றொரு இஸ்லாமியப் பெண்ணுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் கொடுமையான தீர்ப்பை அளித்துள்ளது. அதில், அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் சடலங்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த தண்டனையை சுமார் ஒரு மாத காலம் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.