ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. ஐரோப்பிய கூட்டமைப்பு நேற்று இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தங்கள் முழு ஆதரவு இருக்கும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'பயங்கரவாதிகளுக்கு ஆதரவும், புகலிடம் வழங்குவதையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு இந்த தாக்குதல் மூலம் வலுப்படவே செய்யும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து ரஷ்யா அதிபர் புதின் கூறுகையில், 'தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது மனமார்ந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிகப்பெரிய கொடூர குற்றத்திற்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்' என கூறியுள்ளார்.