சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவில் அணிலை உயிருடன் சாப்பிட்ட தம்பதியர் பிளேக் நோய் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மங்கோலியா நாட்டில் அணிலை உயிரோட சாப்பிட்டால் பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இதனால் மங்கோலியா நாட்டின் பயான் ஒல்கி மாகாணத்தின் சகானூர் நகரை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த வாரம் அணில் ஒன்றை பிடித்து, அதனை சமைக்காமல் அதன் சிறுநீரகம், வயிற்றுப்பகுதி மற்றும் பித்தப்பை உள்ளிட்ட உடல் உறுப்புகளை பச்சையாகவே சாப்பிட்டுள்ளனர். இப்படி சாப்பிட்டால் பலம் கிடைக்கும் என எண்ணி சாப்பிட்ட அவர்களுக்கு நோய் கிடைத்ததுதான் மிச்சம்.
அணிலை சாப்பிட்ட அவர்களுக்கு தொடர் வாந்தி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இந்த தம்பதியினர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்களை பரிசோதித்த மருத்துவர் இவர்களுக்கு பிளேக் நோய் இருப்பதை கண்டறிந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், கடைசியில் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.