Skip to main content

குட்கா வழக்கு; அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கல்!

Published on 10/03/2025 | Edited on 10/03/2025

 

Copy of chargesheet provided to former ADMK ministers

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உணவு பாதுகாப்புத்துறை செந்தில் முருகன்,  மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராகக் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இது தொடர்பான விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த போது, இந்த வழக்கை எம்.பி., எல்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் இன்று (10.03.2025) விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது.  மேலும் 492 ஆவணங்களைக் கொண்ட மின்னணு வடிவிலான குற்றப்பத்திரிக்கை தொடர்பான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 24 பேருக்குச் சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கையின் நகலைச் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. 

சார்ந்த செய்திகள்