எச்.ஐ.வி. வைரஸில் இருந்து முற்றிலும் குணமடைந்த உலகின் முதல் நபர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.
கடந்த 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த டிமோதி ரே பிரவுன் 1995 ஆம் ஆண்டு எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து புதிய மருத்துவ ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அவரின் எய்ட்ஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் மூலமாக கடந்த 2007 ஆம் ஆண்டு அவர் எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பிலிருந்து முற்றிலும் குணப்படுத்தப்பட்டார். இதனை குறிப்பிடும் விதமாக அவருக்கு ‘பெர்லின் நோயாளி’ என்ற பெயரும் உண்டு.
எச்.ஐ.வி.லிருந்து குணமாக சிகிச்சை பெற்றுவந்த சூழலில், 2006 ஆம் ஆண்டு அவருக்கு எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், அதற்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக உயிரிழந்ததாக அவரது மனைவி டிம் ஹோஃப்கென் தெரிவித்துள்ளார்.