Skip to main content

மாஸ்க் அணிய சொன்ன பெட்ரோல் பங்க் ஊழியர் சுட்டுக்கொலை!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

ds

 

ஜெர்மனியில் பெட்ரோல் போட வந்த நபர், மாஸ்க் அணியச் சொன்ன ஊழியரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் மெலன் நகரில் பைக்கில் வந்த ஒரு முதியவர் அங்கிருந்த பணியாளரிடம் பெட்ரோல் போட சொல்லியுள்ளார். அவரை கவனித்த பணியாளர், அவர் மாஸ்க் அணியாததைக் கண்டதும், மாஸ்க் அணிந்திருந்தால்தான் பெட்ரோல் போட முடியும் எனக் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் செய்த அந்த முதியவர், சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த இடத்தைவிட்டுச் சென்றுள்ளார். 

 

ஒருமணி நேர இடைவெளியில் மீண்டும் மாஸ்க் அணிந்து வந்த அவர், பெட்ரோல் போடச் சொல்லியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது திடீரென கைகலப்பு ஆகியுள்ளது. இதில், கீழே விழுந்த அந்த முதியவர், பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த இளைஞரை தலையில் சுட்டுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
incident for petrol station manager in Tiruvannamalai

திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை  (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலினல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு இளைஞர்கள் பெட்ரோல் பங்க் மேலாளரை அறிவாளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போடமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். 

Next Story

சோளக்காட்டில் பதுக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி; 2 பேருக்கு போலீசார் வலை

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

A country gun hidden in a cornfield; Police net for 2 people

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அடுத்த ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக சோளக்காடு ஒன்று உள்ளது. ரமேஷ் தினமும் சோளக்காட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பார்வையிடுவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்று ரமேஷ் தனது சோளக்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரியூர் - மல்லியம்மன் செல்லும் நடைபாதையில் காலணித் தடங்கள் இருந்தன. இதையடுத்து ரமேஷ் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு பகுதியில் நாட்டுத் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  

 

மேலும் அந்தப் பகுதியில் பாத்திரங்களும் இருந்தன. இதுகுறித்து ரமேஷ் கடம்பூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், யாரோ மர்ம நபர்கள் ரமேஷின் காட்டில் நாட்டுத் துப்பாக்கியைப் பதுக்கி வைத்து வேட்டைக்குச் செல்லும்போது பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடம்பூர் போலீசார் ரமேஷ் காட்டை ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது நாட்டுத் துப்பாக்கியைத் தேடி அதே பகுதியைச் சேர்ந்த வேட்டையன்(62), ராமர் (39) ஆகியோர் வந்தனர். அவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

 

போலீசார் விசாரணையில் வேட்டையன், ராமர் அவர்களது நண்பர்கள் மேலும் இரண்டு பேர் சேர்ந்து வேட்டையாடுவதற்காக ரமேஷ் சோளக்காட்டில் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்தது தெரியவந்தது. வேட்டைக்குச் செல்லும் இவர்கள் மிருகங்களை வேட்டையாடி சோளக்காட்டில் கொண்டு வந்து அவற்றை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதற்காக காட்டில் பாத்திரங்களையும் வைத்திருந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேட்டையன், ராமர் இருவரையும் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.