ஐஃபோன்களில் உளவு செயலிகள் நிறுவுவதற்கு எதிராக இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென்பொருள் மூலமாக, உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக பொதுமன்னிப்பு சர்வதேச அமைப்பு வெளியிட்ட தகவல் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க நாட்டின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் ஐஃபோன்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்.எஸ்.ஓ. நிறுவனம் தனது செயலிகளை ஐஃபோன்களில் சட்ட விரோதமாக நிறுவுவதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ‘தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடாக 75,000 அமெரிக்கா டாலர்களை வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.