கரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 25 ஆண்டுகளுக்கு முன்பே, நகரத்திலிருந்து வெகுதூரத்தில் தான் உருவாக்கிய பண்ணைவீட்டில் குடியேறியுள்ளார்.
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளது. சீனாவில் 80,967 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில் பிரிட்டனில் பல்வேறு ஐ.டி. நிறுவனங்களை நடத்தி வரும் பிரபல தொழிலதிபரான பீட்டர் டாவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 ஆண்டுகளாக அவர் உருவாக்கி வைத்திருந்த பிரம்மாண்ட பண்ணைவீட்டில் தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.
சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு நார்ஃபோல்க் என்ற கிராமத்தில் 1,500 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார் பீட்டர். முதலில் அங்குத் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்திலிருந்த பீட்டர், பின்னர் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டார். அவரின் யோசனைப்படி, பேரிடர் காலங்களில் தனது குடும்பத்துடன் வசிக்கும் வகையில் 5 சொகுசு மாளிகைகள், தூய்மையான குடிநீர், இயற்கை முறையில் வளர்க்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறி தோட்டம், கால்நடை பண்ணை, கேளிக்கை விடுதிகள், பொழுதுப்போக்கு பூங்காக்கள் என அனைத்து வசதிகளோடு ஒரு சிறிய நகரமே அங்கு உருவாக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக,பல்வேறு சூழல்களில் இந்த பண்ணைவீடு குறித்துப் பேசிவந்த பீட்டர், என்றாவது ஒரு நாள் உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடிய பேரழிவு நிகழும் என்பதை அவர் தீர்க்கமாக நம்புவதாகத் தெரிவித்திருந்தார். மேலும், அப்படிப்பட்ட நேரத்தில் தனது குடும்பத்துடன் பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த பண்ணைவீட்டை உருவாக்கியுள்ளேன் என்றும் அவர் கூறி வந்தார். இந்த சூழலில் பிரிட்டனில் கரோனா பரவல் காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டு வரும் சூழலில், பீட்டர், தனது குடும்பத்தினர் 30 பேருடன் அந்த பண்ணை வீட்டில் பாதுகாப்பாகக் குடியேறியுள்ளார்.