வடகொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தென்கொரியாவைச் சேர்ந்த குழு புறப்பட்டுச் சென்றுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் கடந்த சில ஆண்டுகளாக போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவுடனான தென் கொரியாவின் இணக்கமான சூழல், வட கொரியாவின் அமெரிக்க எதிர்ப்பு என இந்தப் போர்ப்பதற்றத்தை சற்றும் குறைவில்லாமல் வைத்திருக்க பல காரணங்கள் இருக்கின்றன.
சமீபகாலமாக வடகொரியா நடத்திவரும் ஏவுகணை சோதனை, கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் போர்ச்சூழலை உருவாக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே வார்த்தைப் போர்கள் மட்டும் நடந்துவந்ததால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், தென்கொரியாவின் தேசிய உயர் அதிகாரியான சுங் யூயி யோங் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு வடகொரியாவில் அமைதிப்பேச்சுவார்த்தை நடந்துவதற்காக விரைந்துள்ளது. பயணத்திற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த சுங் யூயி யோங், ‘அணு ஆயுதமற்ற நிலப்பரப்பாக கொரிய தீபகற்பம் திகழவேண்டும் என்கிற தென் கொரிய அதிபர் மூன் ஜேயின் விருப்பத்தை பேச்சுவார்த்தையில் வலியுறுத்த இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா - வடகொரியா இடையே பேச்சுவார்த்தை நடத்துவதை உறுதிசெய்யும் விதமாகவும் இந்தப் பேச்சுவார்த்தை இருக்கும் என அவர் கூறியுள்ளார்.