மலேசியா நாட்டில் நடைபெற்று வந்த கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட விரிசலால் முஹ்யித்தீன் யாசின் தலைமையிலான புதிய கூட்டணி அரசு அமைந்தது. அதன்பிறகு இந்த அரசு கரோனாவை சரியாகக் கையாளவில்லை எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில் பெரும்பான்மையை இழந்ததால், தற்போது முஹ்யித்தீன் யாசின் தலைமையிலான அரசு ராஜினாமா செய்துள்ளது.
கூட்டணிக் கட்சியான யூஎம்என்ஓ தனது ஆதரவை வாபஸ் பெற்றதால், முஹ்யித்தீன் யாசின் தலைமையிலான அரசு பெருமான்மையை இழந்தது. யூஎம்என்ஓ கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் கட்சியின் தலைவர் அஹ்மத் ஆகியோர் ஊழல் குற்றசாட்டுகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்களுக்கு எதிரான ஊழல் புகாரை அரசு கைவிடாததால், அக்கட்சி அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மலேசிய அரசு ராஜினாமா செய்துள்ளதையடுத்து, பிற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்குமா அல்லது தேர்தல் நடைபெறுமா எனச் சந்தேகம் நிலவுகிறது. அதேநேரத்தில் தேர்தல் நடைபெற்றால் கரோனா அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.