ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ள நிலையில், தாலிபன்கள் அந்தநாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர். நாட்டிலுள்ள 34 மாகாண தலைநகரங்களில் இதுவரை ஒன்பது மாகாண தலைநகரங்களை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், வடக்கு ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான மசாரை நோக்கி முன்னேறி வருகின்றனர். இந்த நகர் தாலிபன்களின் கைகளுக்குச் சென்றால், ஆப்கானிஸ்தான் அரசு நாட்டின் வடக்கு பகுதி மீதான தனது கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அதிபரே மசார் நகருக்குச் சென்று, அந்த நகரைக் காப்பாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்கள், தாலிபன்களிடம் சரணடையும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இது ஆப்கானிஸ்தான் அரசுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேலும், தற்போதைய நிலவரப்படி தாலிபன்கள் விரைவில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தின் புதிய மதிப்பீட்டின்படி, 90 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தாலிபன்களிடம் வீழும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.