அமெரிக்காவில் அல்கொய்தா அமைப்பு நடத்திய இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும், ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் தந்ததற்காக ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, அங்கு ஆட்சியிலிருந்த தலிபான் பயங்கரவாதிகளை அதிகாரத்திலிருந்து அகற்றினர்.
அதிலிருந்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாட்டுப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் தொடர்ந்து போர் நடந்து வந்தது. தலிபான்களை ஒடுக்க அமெரிக்கப் படையினர் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தனர். இந்தநிலையில் கடந்த வருடம் தலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், தனது இராணுவத்தையும், தங்களது கூட்டணி நாடுகளின் இராணுவத்தையும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைத்துக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
அதேபோல் தலிபான்கள், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் தர மாட்டோம் என ஒப்புக்கொண்டனர். இதன்தொடர்ச்சியாக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகளும் அதன் கூட்டணி நாட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறும் என அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அமெரிக்கப் படைகளும் அதன் கூட்டணி நாட்டுப் படைகளும் தொடர்ந்து வெளியேறி வந்த நிலையில், தலிபான்கள் மீண்டும் ஆப்கானைக் கைப்பற்றினர். இதனையடுத்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் இராணுவ வீரர்கள், தங்கள் நாட்டுக் குடிமக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது அமெரிக்கா படைகளும், அதன் கூட்டணி நாட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளனர். இதன்மூலம் அமெரிக்காவிற்கும், தலிபான்களுக்குமிடையேயான 20 வருடப் போர் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அந்தநாட்டு இராணுவ வீரர்கள், காபூல் விமான நிலையத்திலிருந்த பல விமானங்களையும் கவச வாகனங்களையும் இனி எப்போதும் செயல்பட முடியாதவாறு முடக்கியுள்ளனர். உயர் தொழில்நுட்ப ராக்கெட் பாதுகாப்பு அமைப்பையும் செயலிழக்கச் செய்துள்ளனர்.
மேலும், அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்த தனது தூதரக அதிகாரிகளை கத்தாருக்கு மாற்றியுள்ளது. ஆப்கானுக்கான அமெரிக்கத் தூதரகம் இனி அமெரிக்காவிலிருந்து செயல்படவுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து, ஆப்கானிஸ்தானுக்கு முழு சுதந்திரத்தை அடைந்து விட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரரின் புகைப்படத்தை அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.