ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சவுதி அரேபிய அரசு வழங்கிய தனிவிமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வேறு வழியின்றி மக்கள் பயணிக்கும் சாதாரண விமானத்தில் சவுதி அரேபியா புறப்பட்டார்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நியூயார்க் நகரில் இருந்து தனி விமானத்தில் மீண்டும் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகருக்கு புறப்பட்டனர். ஆனால், விமானம் நடுவழியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் விமானம் நியூயார்க் நகருக்கு திருப்பி விடப்பட்டது.
நியூயார்க்கில் உள்ள ஜான் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கி சிறப்பு விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஹோட்டலில் தங்கினர். பின்பு நீண்ட நேரமாகியும் விமான கோளாறு சரி செய்யப்படாததால், இதையடுத்து, நியூயார்க்கில் இருந்து சவுதி அரேபியாவின் ரியாத் நகர் செல்லும் சாதாரண விமானத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செல்ல முடிவு செய்தார். அதை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அதே விமானத்தில் பயணித்தனர்.