பாகிஸ்தான் அதிபராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக நேற்று அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார். 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், அங்கு அரசு ரீதியிலான பல சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளார்.
![pakistan prime minister imrankhan meets imf officials in america](http://image.nakkheeran.in/cdn/farfuture/eUlRjjMTcje_JpXQaSiZ87yNLOvxj-KVU-Ka89gnR2c/1563782778/sites/default/files/inline-images/imran-khan-s_0.jpg)
இந்த பயணத்தில் வெள்ளை மாளிகை சென்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார். இம்ரான் கான் நேற்று அமேரிக்கா செல்லும் போது தனி விமானம் மூலமாக பயணம் செய்யாமல், வர்த்தக விமானத்தில் பயணிகளுடன் பயணம் செய்து வாஷிங்டன் சென்றடைந்தார். ஆனால் வாஷிங்டன் விமான நிலையத்தில் அவரை வரவேற்க அமெரிக்காவின் சார்பில் அதிகாரிகள் யாரும் வராதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தானின் நிதி நிலையை மேம்படுத்த கடன் பெறுவது தொடர்பாக பேச ஐஎம்எப் அமைப்பின் செயல் நிர்வாக இயக்குனர் டேவிட் லிப்ஸனை சந்தித்து பேசினார். ஆனால் அவர் இம்ரான் கானுக்கு அறிவுரை கூறி, கடன் தருவது குறித்து முடிவு சொல்லாமல் சந்திப்பை முடித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள டேவிட் லிப்ஸன், "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தபோது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அப்போது வரி வசூலிப்பதன் மூலம் நிதி ஆதாரங்களை பெருக்குவதில் கவனம் செலுத்தமாறு அவருக்கு நாங்கள் ஆலோசனை கூறியுள்ளோம். வளர்ச்சி திட்டங்களுக்கும், சமூகநல மேம்பாட்டுக்கும் பாகிஸ்தான் அரசு செலவு செய்யலாம். ஆனால் அதே நேரம் மற்றவர்களிடம் வாங்கும் கடன் அளவையும் குறைப்பதற்கு பாகிஸ்தான் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.