சந்திரயான் 2 முயற்சி தெற்காசியாவிற்கே விண்வெளி துறையில் மிகப்பெரிய பாய்ச்சல் என பாகிஸ்தானின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான நமிரா சலீம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கும் 2.1 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது தகவல் தொடர்பை இழந்தது. விக்ரம் லெண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ முயன்று வரும் நிலையில் பாகிஸ்தானின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான நமிரா சலீம் இந்தியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ""சந்திரயான் -2 உண்மையில் தெற்காசியாவிற்கான ஒரு மாபெரும் பாய்ச்சலாகும். இது ஆசியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக விண்வெளித் துறையையும் பெருமைப்படுத்தும் விஷயமாகும்" என தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு இந்தியர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.