பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மார்ச் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைச் சோதனை செய்ததில், அவர் ஆல்பா மற்றும் பீட்டா ஆகிய இரண்டு வகை கரோனாவாலும் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஜனவரியில் பிரேசில் விஞ்ஞானிகள், இதேபோல் இரண்டு வகை கரோனாக்களினால் பாதிக்கப்பட்டதாக இரண்டு நபர்களைக் கண்டறிந்தனர். இருப்பினும் அது எந்த அறிவியல் பத்திரிகைகளிலும் ஆதாரப்பூரமாக வெளியாகவில்லை. எனவே, உலகில் முதன்முதலாக இருவகை கரோனா வைரஸ்களால் பாதிக்கப்பட்ட முதல் பெண் இவர்தான் எனக் கருதப்படுகிறது.
ஒரே நபருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வகை கரோனாவால் பாதிக்கப்படுவது நிபுணர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவலைக்குரிய கரோனா வகைகளைக் கண்டறிவதற்கான சோதனைகள் குறைவாக இருப்பதால், ஒரே நபருக்கு இரண்டு வகை கரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் நிகழ்வுகள் குறைவாகக் கண்டறியப்படுகிறது எனத் தெரிவித்துள்ள பெல்ஜியத்தை சேர்ந்த மூலக்கூறு உயிரியலாளர் அன்னே வான்கீர்பெர்கன், ஒரே நேரத்தில் இரண்டு வகை கரோனா பாதிப்பு ஏற்படுவது குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.